நான் உங்கள் நல்ல நண்பன்

trichy, tamilnadu, India
Love is a universal language, so keep love with all.

Sunday, July 28, 2013

மனிதம் தொலைத்த மதம்- மதம் பிடித்த மனிதன்

நண்பர்களே, தயவுசெய்து இந்த கட்டுரையை படிக்கவும் - மதம் குறித்து எனது பார்வை

       சமீப காலமாக என் மனதில் மிகுந்த அச்சத்தையும், துயரத்தையும் உண்டாக்கிய ஒரு விடயத்தைப் பற்றி பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

சமூக வலைதளங்களில் ( Facebook, Twitter) பகிரப்படும் மதம் சார்பான கருத்துக்களே.
       ஒருவர் தன் மதத்தைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து பேசலாம், எழுதலாம். அது ஆரோக்கியமானதும் கூட, ஆனால் அதில் மற்ற மதங்களைப் பற்றி விமர்சிப்பதும், இகழ்ந்து எழுதுவதும் மிகவும் அபாயகரமானது. கண்டனத்துக்கிரியது. மிக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது இந்து - முஸ்லிம் பற்றியே. இதனால் நம்மிடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி மதத்தின் பெயரால் உண்டாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சிலரது அரசியல் நோக்கத்திற்காகவும், சுய லாபத்திற்காகவும் இந்து - முஸ்லிம் வெறுப்புணர்ச்சி உண்டாக்கப்படுகிறது.
         
       இதனால் நம் வருங்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுசெல்வது என்ன? ஏற்கனவே வருங்காலத்தில் அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். குறிப்பாக குடிநீர் தடுப்பாடு, புவி வெப்பமயமாதல் - பருவ நிலை மாற்றம், பொருளாதார சிக்கல், மக்கள் தொகைப்பெருக்கம். இதனுடன் அவர்களது மனதிலும் மதம் என்னும் மதத்தை விதைத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள வேண்டுமா? அல்லது அவர்கள் மனிதம் கொண்டு எதிர்வரும் சிக்கல்களை ஒன்றிணைந்து களைய போராட வேண்டுமா? சிந்தியுங்கள் நண்பர்களே. தயவுசெய்து மற்ற மதங்களைப் பற்றி இகழ்ந்து கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். மற்ற மதத்தினருடன் சகோதரத்துவுடன் பழகுங்கள், அவர்களது மதத்தையும் மதித்து மனிதத்தைப் பேணுங்கள்.ஒருவருக்கு ஒரு அநீதி இழைக்கப்படுகிறது என்றால், அது அநீதி என்று தெரியும் பட்சத்தில் அவர் எந்த மதத்தை சேர்ந்தவராயினும், மற்ற மதத்தை சார்ந்தவரும் அந்த அநீதிக்கு எதிராக போராடும் சிறந்த குணத்தைப் பெற்றிருக்க வேண்டும். மாறாக என் மதத்தை சேர்ந்தவனுக்கு மட்டுமே நான் போராடுவேன் என்று சொல்வது மனிததன்மையற்ற செயல். எந்த கடவுளும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

                  குறிப்பாக சமீபத்தில் ஒரு பா ஜா கா அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சிறுது நிமிடத்தில் அதற்கு அரேபிய வந்தேறிகள்தான்(முஸ்லிம்) காரணமென்று சிலரால் பரப்பப்படுகிறது, அவரது கொலைக்கு காரணம் அரசியல் உள்நோக்கமாக இருக்கலாம் அல்லது வேறு தனிப்பட்ட பிரச்சினைகளாக கூட இருக்கலாம். அல்லது அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலையுண்டார் என்றால், கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எந்த கடவுளும் மதத்தின் பெயரால் ஒரு மனிதன், இன்னொரு மனிதனை கொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார், அப்படி ஏற்றுக்கொண்டால் அவர் கடவுளாக இருக்க முடியாது.
            கொலைக்கான உண்மைக் காரணம் விசாரிக்கப்பட்டு, விரைவில் வெளிவரும். அதற்கு முன்னர் மற்ற மதத்தினரை குறைக்கூறுவது, ஒட்டுமொத்த மதத்தையும் தவறாக சித்தரிப்பது போன்ற காரியங்களை தவிர்ப்போம். இல்லையேல், மதவெறி மக்கள் மனதில் பதிந்து, மிகப்பெரிய கலவரத்திக்கு வழிவகுக்கும். வேண்டாம் இனி ஒரு மதக்கலவரம். ஏற்கனவே மதத்தின் பெயரால் பல குடும்பங்கள் நிர்மூலமானது, பலரது வாழ்க்கை நாசமானது. இனி வரும் தலைமுறையாவது ஒற்றுமையாக வாழ , அமைதியான சூழலை உண்டாக்க முயர்ச்சிப்போமாக.

     ஒரு நாள் வரும், மதம் என்னும் மாயை அழிந்து மனிதம் என்னும் மகத்தான புள்ளியில் நம் அனைவரும் ஒண்றினைந்து வாழும் அந்நாளிற்கான விடியலை நோக்கி நம் பயணப்பட இறைவன் நமக்கு அருள்புரிவானாக.


இப்படிக்கு
காஜா

Sunday, August 5, 2012

நாங்களும் தமிழர்தாங்கோ


வணக்கம் நண்பர்களே, வேலைபளு காரணமாக வெகு நாட்கள் கழித்து ப்ளாக் எழுத வந்திருக்கே. இந்த முறை என் மனச உறுத்துன ஒரு விஷயத்தைப் பற்றி எழுதப்போறேன்.

 நாங்க வசிக்கிற பகுதியில் பெரும்பாலும் முஸ்லிம் குடும்பங்கள்தான் அதிகம், ஒன்றிரண்டு இந்துக்கள் குடும்பங்களும் வசிக்கிறாங்க. அதுல என்னுடைய நீண்ட கால நண்பனோட குடும்பமும் ஒன்று.

பொதுவாக அந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களோட( Mosque) வளர்ச்சி பணிகளுக்காக , ஓவ்வொரு முஸ்லிம்களோட வீடுகளிலும் சந்தா தொகைன்னு ஒரு சிறிய தொகை வசூலிக்கப்படுவதுண்டு. ஒரு முறை தவறுதலாக என்னோட நண்பனோட வீட்டுக்கும் போய் கேட்டுருக்காங்க, அதுக்கு அவன் நாங்க                     " தமிழர்கள்" ன்னு சொல்லவும், வந்தவங்க தவறுதலா வந்துட்டோம்னு சொல்லிட்டு அடுத்த வீட்ட நோக்கி போய்ட்டாங்க. இந்த விஷயத்த நண்பன் எங்கிட்ட சொன்னப்ப, நான் ஆச்சர்யத்தோட திருப்பிக் கேட்டேன், அப்ப அவ சொன்ன விஷயம் எனக்கு உறுத்தலா இருந்துச்சு, அதாவது பொதுவா " தமிழர்கள்" னா இந்துக்கள்னு அர்த்தமாம்.

நான் என் நண்பனிடம் திருப்பிக் கேட்டேன், அது எப்படி " தமிழர்கள்" னா இந்துக்கள்னு ஆகும், நாங்களும் தமிழர்கள்தான், எங்களுக்கும் " தமிழ்" தவிர்த்து வேறு மொழி தெரியாது, தமிழ்நாட்டோட கலாச்சாரத்தையும், பழக்கவழக்கத்தையும்தான் நாங்களும் பின்பற்றுகிறோம். மதத்தால வேறுபட்டாலும் , இனத்தால நாமெல்லாரும் ஒன்றுதான். அப்படியிருக்கும்போது  "தமிழர்கள்"னு சொல்லும்போது, அது எப்படி இந்துக்கள மட்டும் குறிக்கும்னு நான் கேட்டப்ப அதுல உள்ள உண்மைய உணர்ந்து இனிமே திருத்திக்கிறேன்னு சொன்னான்.

என்ன பொருத்தவரைக்கும், ஒரு மனிதனோட அடையாளம், அவனோட "மதம்" இல்லை, "இனம்"தான் அவனோட அடையாளம்.நான் "தமிழினம்" அப்படின்னு சொல்லும்போதுதான் நான் பெருமபடுறேன். நான் வெளிநாட்டுல வேலை பார்க்குறேன், பொதுவா யாராவது என்னைப் பற்றிக் கேட்டால், நான் முதல்ல " தமிழன்"ன்னு சொல்லிட்டுதான் அப்புறம் தேவைப்பட்டால் மதத்தைப் பற்றி சொல்வது என்னுடைய வழக்கம்.

கடைசியா நான் சொல்ல விருப்பபடுறது ஒன்னுதான், எங்களோட மதம்                   " வந்தேரிய" மதமா இருக்கலாம். ஆனா நாங்கள் " வந்தேரிகள்" கிடையாது. தயவுசெய்து இனத்தால ஒன்றுபட்ட எங்களை , மதத்தை முன்னிட்டு வேற்றுமை படுத்திறாங்க.

" தமிழன் என்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா"

நன்றி வணக்கம். மீண்டும் சந்திப்போம்.

Thursday, December 30, 2010

2011 Wishes

வணக்கம் நண்பர்களே,

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.






Sunday, November 14, 2010

INCEPTION - கனவின் வேட்டை

வணக்கம் நண்பர்களே,


கிறிஸ்தபோர் நோலனின் இன்செப்ஷன் (Inception ‎) திரைப்படத்தை இன்று பார்த்தேன் . ஒரு நிமிசம் எது நிஜம் எது கனவு என்று குழம்பிப் போனேன் . கனவிற்குள் போய் எண்ணங்களை திருடி வருபவனை பற்றிய படம்.


படத்தில், நிஜ வாழ்க்கையிலிருந்து ஒரு கனவிற்குள் சென்று, அந்த கனவிலிருந்து இன்னொரு கனவிற்குள் சென்று, அதன் வழியே மற்றுமொரு கனவிற்குள் செல்வது போல நான்கு கட்டங்களாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.



நான்கு கட்டங்களிலும் வரும் காட்சிகள் மிகவும் அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தில் ஒளிப்பதிவு முக்கிய பங்கு வகிக்கிறது. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நிமிடமேனும் கவனம் சிதறினால் படம் நம்மை குழப்பிவிடும். அந்தளவிற்கு படத்தோடு ஒன்றி பார்த்தால்தான், படத்தை ஓரளவிற்கேனும் புரிந்துக்கொள்ள முடியும்.


என் வாழ்விலும் , இதுபோல் ஒரு சம்பவம் நடந்துள்ளது. நான் என் கனவில் ஊரிலிருக்கும் என் பாட்டி வீட்டிற்கு சென்றேன், அங்கே இரவு துக்கத்தின் போது நான் இன்னொரு கனவிற்குள் சென்றேன். அதாவது நிஜ வாழ்க்கையிலிருந்து ஒரு கனவிற்குள் சென்று, அந்த கனவிலிருந்து இன்னொரு கனவிற்குள் சென்றேன். இதை அப்பொழுது என் நண்பனிடம் சொல்லும் போது அதை அவன் நம்பவில்லை. ஆனால் இந்தப் படத்தை பார்த்தால் நம்புவான் எனறு நினைக்கிறேன்.

கனவு எதனால் வருகிறது, கனவில் வரும் நிகழ்வுகள் பெரும்பாலும் விழித்தவுடன் நமக்கு முழுவதும் நினைவுருப்பதில்லை( குறிப்பாக கனவில் வரும் நிகழ்வுகளின் ஆரம்பம்). மனோதத்துவ நிபுணர் Dr. சிக்மண்ட் பிராய்டு அவர்கள் நிராசைகள்தான் பெரும்பாலும் கனவாக வருகிறது என்று கூறினார். அதுவும் உண்மைதான், நிஜ வாழ்க்கையில் ஒருவன் ஆசைக்கொண்ட நடிகையுடன் கனவில் உல்லாசமாக இருக்கிறான், ஆங்கிலம் பேச தெரியாதவன் கனவில் ஆங்கிலத்தில் பொழந்துக்கட்டுகிறான், ஏழைகள் கனவில்தான் உல்லாச வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். இப்படி கனவு ஒரு மனிதனின் நிராசைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறது. ஒருவன் தன் தந்தை இறப்பதுபோல் கனவு கண்டால் அதுவும் நிராசைதானா? என்று நீங்கள் கேட்கலாம். அதாவது அவன் தந்தை இறப்பது போன்ற ஒரு எண்ணம் , ஏதோ ஒரு சூழ்நிலையில் அவன் உள்மனதில் பதிந்து அது கனவாக வருகிறது ( எ.கா : தன் நண்பனின் தந்தையின் மரணத்தின்போது , தன் தந்தையும் ஒரு நாள் இது போல் இறந்துப் போகலாம் என்ற எண்ணம் நம் உள்மனதில் பதிந்துவிடுவதால்) என்று Dr. சிக்மண்ட் பிராய்டு கனவிற்கான விளக்கத்தை மிக தெளிவாக கூறுகிறார்.


கனவு, மனிதனின் அனைத்து நிராசைகளையும் நிறைவேற்றிக்கொள்ளும் ஒரு கருவியாக பயன்படுகிறது. நல்ல கனவே மனிதனை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது. Dr. அப்துல்கலாம் சொன்னதுபோல், கனவு காணுங்கள். நல்ல கனவு நம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லட்டும்

நன்றி வணக்கம்..

Wednesday, November 3, 2010

தீபாவளி

வணக்கம் நண்பர்களே,



அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள், இத்திருநாளில் நம் மனத்தில் நரகாசுரன் போல் படிந்துகிடக்கும் தீயவைகளை அகற்றி, எல்லா வளமும்,நலமும் பெற்று, இருப்போர் - இல்லாதோருக்கு கொடுத்து ஒன்றுபட்டு வாழ்வோமாக!

முதல் முறையாக தீபாவளிக்கு என் குடும்பத்தையும், நண்பர்களையும், என் நாட்டையும் விட்டு அயல் நாடான(பிழைக்க வந்த நாடு) சிங்கப்பூரில் கொண்டாடுகிறேன். ஆயினும் சந்தோஷமாக கொண்டாட முயற்சிக்கிறேன்.

எனக்கு பல நாட்களாகவே தமிழர்கள் பற்றிய ஒரு வருத்தம் உள்ளது. அதாவது, தீபாவளி என்பது இந்துக்கள் பண்டிகை என்றபோதிலும், அப்பண்டிகை வடஇந்தியாவில் தோன்றிய பண்டிகை என்பது நாம் அறிந்ததே. அப்படியிருக்க தீபாவளிக்கு தரும் முக்கியத்துவத்தை, நம் தமிழ் பண்டிகையான, தமிழர்களின் பண்பாட்டையும், நாகரிகத்தையும் பறைசாற்றும் பொங்கல் பண்டிகைக்கு தராததுதான் என்னுடைய நீண்ட நாள் வருத்தம்.

என்னுடைய இந்த வருத்தம், தமிழ் மீதும், தமிழ் கலாசாரத்தின் மீதும் பற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் இருக்கும் என்பது என் கணிப்பு, ஆகையால் தீபாவளிக்கு தரும் இந்த முக்கியத்துவத்தையும், உற்சாகத்தையும் விட, நம் தமிழர் பண்டிகையான பொங்கலுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டுமென இந்நாளில் உங்களை மனமார வேண்டிக்கொள்கிறேன்.

மீண்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Saturday, October 23, 2010

உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்

திரைப்படங்களை ரசியுங்கள் ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் நம்பி விடவேண்டாம். உண்மையான ஹீரோ உங்கள் பகுதியில் நேர்மையாகவும், தியாக உணர்வோடும், சேவை மனப்பான்யுடனும், துணிவுடனும் உழைத்துக் கொண்டிருப்பார்கள் ஒரு ராணுவ வீரராக, தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவருமாக இருக்கலாம். அவர்களை சந்திக்கும் சமயத்தில் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் கவுன்சிலர் தேர்தலில் நிற்கக்கூடும். நின்றால் காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.


இப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன். இன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள். இது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமை பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.


பெயர் : நாராயணன் கிருஷ்ணன்
வயது : 29
இருப்பு : மதுரை

அப்படி என்ன செய்து விட்டார்?

அது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல்.

தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம்? அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார். அருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு லட்சத்து இருபதாயிரம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.

ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, விருதுகள் வென்ற செப் சமையல் கலை வல்லுநர் இவர். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டு போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர், கீழேகிடக்கும் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கி வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பிக்கிறார். இது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காக இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அன்னை இவர் குறித்து கவலை பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்து போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த தாய் ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார். இதை படித்த போது என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு வந்ததை அடக்க முடியாமல் தவித்தேன். எழுதும் இந்த கணமும் கூட.

நாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலபிசேகம் முதல் முளைப்பாரி வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிரீர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா? அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள். இவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிசென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.



"அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்

பெற்றான் பொருள்வைப் புழி."


ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.

ஆதலால் நீங்கள் சேர்த்துவைக்க இடம்

http://www.akshayatrust.org/contact.php

Akshaya’s Helping in H.E.L.P. Trust
9, West 1st Main Street,
Doak Nagar Extension,
Madurai – 625 010. India
Ph: +91(0)452 4353439/2587104
Cell:+91 98433 19933
E mail : ramdost@sancharnet.in

மொக்கையாக எத்தனையோ வோட்டு போட்டுருக்கோம். ஒரு நல்ல விசயத்திற்கும் வோட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் வோட்டு போடவேண்டிய இடம்

http://heroes.cnn.com/vote.aspx

இதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

நான் படித்ததில் இருந்து - உங்கள் சிந்தனைக்கு.


மூலம் : http://agalvilakku.blogspot.com/2010/10/blog-post.html 

Monday, October 18, 2010

தாய் - தாரம்

வணக்கம் நண்பர்களே,

இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பபட்ட "நீயா நானா" நிகழ்ச்சியைப் பற்றித்தான் இந்த பதிவு.


இந்த வார தலைப்பு " இந்திய கணவன்மார்கள் அம்மா பிள்ளையாக இருப்பது ஏன்"? , கண்டிப்பாக இந்த தலைப்பை ஒட்டிய இந்த நிகழ்ச்சி அனைவரும் பார்க்க பட வேண்டியளவிற்கு, மிகவும் சிறப்பான விவாதத்துடன் நடைப்பெற்றது.

முதலில், நாம் ஒரு விஷயத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். தாய் மகன் மீதோ, மகன் தாய் மீதோ கொண்டுள்ள அன்பு என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால் இது ஒரு இயற்கையான விஷயம்தான், தாய் பத்து மாசம் சுமக்கிறாள், இருபத்தைந்து வருஷம் பேணி பாதுகாக்குறாள், அதற்கு நன்றி கடனாக மீதமுள்ள காலங்களில் மகன் தாயை போற்றி பாதுகாக்கணும்னு நினைக்கிறான், அதாவது, தன் நன்றி கடனை திருப்பி செலுத்துறான். அப்படி நன்றி கடனை திருப்பி செலுத்துறவன்தான் உண்மையான மகனும் கூட. so, இது ஒரு இயற்கையான விஷயம், இரத்த சொந்தத்தில் வந்த உறவு, அதனால தாய் , மகன் அன்பு என்பது தவிர்க்க முடியாததும்கூட.


ஆனால், மனைவி என்பவள் எந்த சொந்தமும் இல்லாமல் வந்தவள். முன்பின் பரிச்சயம் இல்லாத ஒரு ஆணை நேற்று பார்த்து , இன்று திருமணம் செய்து, இனி வரும் காலம் முழுவதும் அவனுடன்தான் தன் வாழ்க்கையென்று, தன் தாய், தந்தை, சகோதர, சகோதரிகள் மற்றும் தம் உறவினர்கள் எல்லோரையும் விட்டு, உங்களுடன் வந்து வாழும் ஒரு உயிர். உங்களுக்காக தன் உயிரையும் கொடுக்கக்கூடிய ஒரு உன்னத உயிர். அந்த மனைவியின் அன்பிற்கு கைமாறா கணவனாகியா , நீங்க என்ன செய்ய போறீங்க? மனைவியின் அன்பு என்பது , தாயின் அன்பை விட ஒரு படி மேலானது என்பது என் கருத்து.


இதற்கு , என் குடும்பத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியையே என்னால் உதாரணமாக சொல்ல முடியும். ஒரு ரமலான் திருவிழா நாள் அன்று, நான், என் சகோதரர்கள், என் தந்தை அனைவரும் புத்தாடை உடுத்திக்கொண்டு பள்ளிவாசலில் வழிபாடு முடித்துவிட்டு வீடு திரும்பினோம். அப்பொழுது என் தாய் , நாங்கள் புத்தாடை உடுத்திக்கொண்டு சென்று வந்ததால், திருஷ்டி படாமலிருக்க எங்களுக்கு ஆரத்தி எடுத்தார். அப்போது என் தந்தை அந்த ஆரத்தி தட்டை, என் தாயிடமிருந்து வாங்கி , என் தாயிற்கு ஆரத்தி எடுத்தார். திருவிழாவாகிய அன்று அவளும்தானே புத்தாடை உடுத்தியிருக்கிறாள், அவளுக்கும் திருஷ்டி படுமல்லவா? என்று என் தந்தைக்கு தோன்றிய அந்த எண்ணம், ஒரு மகனாகிய எனக்கு தோன்றவில்லை.


என்னை பொருத்தவரை, நல்ல கணவன்-மனைவி உறவு என்பது, தாய்-மகன் உறவை விட மேலானது. அதற்காக தாயிடம் அன்பு செலுத்த வேண்டாமென்று நான் சொல்லவில்லை. ஒரு நல்ல கணவன் என்பவன், தாயையும், மனைவியையும் சரிவிகிதத்தில் போற்ற வேண்டும், இதில் பாரபட்சம் காட்டுவானாயின், அவன் நல்ல கணவனாகவும் இருக்க முடியாது. நல்ல மகனாகவும் இருக்க முடியாது.


( தமிழ் விவாத நிகழ்ச்சியிலே,"நீயா நானா" நிகழ்ச்சிதான் பல பயனுள்ள மற்றும் உணர்வுபூர்வமான தலைப்புகளை கையாண்டு, பல சுவாரசியமான தகவல்களை தந்திருக்கிறது. ஆனால், சிலசமயம் சிலரது கருத்துக்களால், அவர்கள் அவமானபடுத்தப்படுவது போலும், அசெளகர்யமான நிலைக்கு தள்ளபடுவது போலும் , எனக்கு தோன்றுகிறது. இதை தவிர்த்துக்கொண்டால் இந்த நிகழ்ச்சி இன்னும் சிறப்பாக வெற்றியடையும்.)


இதைப்பற்றிய உங்கள் கருத்தையும் நீங்கள் பின்னூட்டமிடலாம்.